×

வெப்ப சலனம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

வேலூர், மே 8: வேலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி தென்மாவட்டங்களில் மட்டும் கோடை மழை தலைகாட்டிய நிலையில், பானி புயல் காரணமாக வடதமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வௌியிட்டது. ஆனால், புயல் திசைமாறி ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி சென்றதால் மழையை எதிர்பார்த்த வடதமிழக மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதற்கு முந்தைய நாள் குடியாத்தம், பள்ளிகொண்டா, ஆம்பூர் உட்பட மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக சோளிங்கரில் 55 மிமீ மழை பதிவானது. தொடர்ந்து அக்னி நட்சத்திர தினமான 6ம் தேதி மாவட்டத்தில் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் இரவு 7 மணிக்கு மேல் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்தது.
அதேபோல் ஆம்பூர், ஆலங்காயம், சோளிங்கர், திருப்பத்தூர், ஆற்காடு, குடியாத்தம், மேலாலத்தூர், பொன்னை, காட்பாடி, அம்முண்டி என பரவலாக மழை பெய்தது. இதையடுத்து ஒரு நாள் இடைவெளி விட்டு நேற்று மாவட்டத்தில் வேலூர், நாட்றம்பள்ளி, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை, திருவலம், ஆற்காடு, சோளிங்கர் என பரவலாக மழை பெய்தது. ஆற்காடு, நாட்றம்பள்ளி, ராணிப்பேட்டை பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தில் பெய்து வரும் மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vellore district ,
× RELATED குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி...